இந்தியா

நீட் முறைகேடு: வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இருந்த தாவரவியல் பேராசிரியை கைது

நீட் வினாத்தாளைத் தயாரிக்கும் நிபுணர் குழுவில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்

கடந்த மே 3 ஆம் தேதி நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வுக்கு முன்பே அசல் கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத்தாள் கசிந்தது அண்மையில் தெரியவந்தது.

மகாராஷ்டிராவில் கசியவிடப்பட்ட வினாத்தாள் ராஜஸ்தான் பயிற்சி மையங்களுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வினாத்தாள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுக்கு பின்னால் இயங்கும் மிகப்பெரிய நெட்வொர்க் குறித்த அதிர்ச்சி உண்மைகள் அடுத்தடுத்த கட்ட சிபிஐ விசாரணையில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மனிஷா குருநாத் மந்தாரே என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லியில் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மனிஷா குருநாத் மந்தாரே, நீட் தேர்வின் உயிரியல் வினாத்தாளை கசியவிட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் நேற்று புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளர் பி.வி. குல்கர்னி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த இருவருமே நீட் வினாத்தாளைத் தயாரிக்கும் நிபுணர் குழுவில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மே 3 அன்று நடந்த நீட் தேர்வை ரத்து செய்துள்ள தேசிய தேர்வு முகமை வரும் ஜூன் 21 மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் தனியாக மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.