நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பேசிய அவர், "நீட் வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் மோடி உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இல்லையெனில், இந்த விவகாரத்தில் பிரதமர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணி நாட்டின் கல்வி முறையை முழுமையாக சீர்குலைத்துவிட்டது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவதற்குத் தகுதியோ அல்லது அனுபவமோ தற்போதைய ஆட்சியில் அளவுகோல் அல்ல.
மாறாக அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களா என்பது மட்டுமே பார்க்கப்படுகிறது. இத்தகைய சுயநலப் போக்குகளே கல்வித்துறையின் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
நீட் தேர்வு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வினாத்தாள் வாட்ஸ்அப் மூலம் விநியோகிக்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்.
இந்த முறைகேட்டின் மூலம் தேர்வு எழுதிய சுமார் 22 லட்சம் மாணவர்களின் கடின உழைப்பு முற்றிலும் வீணடிக்கப்பட்டுள்ளது." என்று சாடினார்.