தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) யின் அடுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி நடத்திய போராட்டம் நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா மூலம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் தீப்கே,
"நாங்கள் எங்களது எதிர்கால வியூகத்தை விரைவில் அறிவிப்போம். நேற்றுதான் டெல்லி போராட்டம் நிறைவடைந்தது. தயவுசெய்து எங்களுக்குச் சிறிது நேரம் கொடுங்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் வழக்குகள் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எந்தவொரு மாணவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்." என தெரிவித்தார்.
பஞ்சாப் விவகாரத்தையும் நாங்கள் கையில் எடுப்போம், அதற்கான திட்டமிடலில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், "அந்தப் பிரச்சனையையும் நாங்கள் கையில் எடுப்போம். அதற்காக ஏற்கனவே திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.
பஞ்சாப் ஆசிரியர் தகுதித் தேர்வு 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு மற்றும் பார்மசி ஆபிசர் தேர்வு உட்பட 6 வெவ்வேறு தேர்வுகளின் வினாத்தாள் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அம்மாநிலத்தின் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலி தள் கட்சியும் வினாத்தாள் கசிவுகளால் மாநிலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் பைன்ஸின் ராஜினாமா செய்யக்கோரி வருகின்றனர்.
குறிப்பாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், "பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் எப்போது ராஜினாமா செய்யப் போகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அவரை ராஜினாமா செய்ய சொல்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.