தர்மேந்திர பிரதான்  
இந்தியா

ஜென் Z தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.. எனக்கு பதவி பொருட்டல்ல - தர்மேந்திர பிரதான் மனம் திறப்பு

நீங்கள் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் மீண்டும் மீண்டும் வருவேன்

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் மத்தியக் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை 25 அன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தர்மேந்திர பிரதான்

அவர் பேசியதாவது,

"ஜென் Z நமது குழந்தைகள். ஆனால் நீட் விவகாரத்தின் போது சில சக்திகள் அவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றன. எனக்கு அப்போது தனிப்பட்ட சுயநலன்கள் எதுவும் இருக்கவில்லை.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்குப் பல கனவுகளும் லட்சியங்களும் உள்ளன. அவர்கள்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்றுவார்கள். எனக்கு இந்த அமைச்சர் பதவி முக்கியமில்லை" என்று தெரிவித்தார்.

விமான நிலையம் அருகே பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் "தர்மேந்திர பிரதான் திரும்பிப் போ" என முழக்கமிட்டு நடத்திய போராட்டத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் மீண்டும் மீண்டும் வருவேன்" என்றார்.

பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் சுமார் 30 பேரை சம்பல்பூர் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜந்தர் மந்தர் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால போராட்டம் கடந்த வாரம் வெற்றி பெற்றது.

அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார்.

தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார்.

இதனிடையே ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையால் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.