நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 அன்று போராட்டம் தொடங்கியது. இதில் ஜூன் 28 முதல் கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்நிலையில் தொடர் அழுத்தத்தின் பேரில், நேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதன் மூலம் 1 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய சிஜேபி தனது இலக்கை அடைந்துள்ளது.
இடையில் ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இப்போராட்டத்திற்கு ஆதரவை அதிகரிக்க செய்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் போராட்டத்திற்கு செவிசாய்க்காத அரசு, கடந்த சில நாட்களில் எழுந்த கடும் அழுத்தத்தின் பேரில் சிஜேபி பிரதிநிதிகளுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் முன்னரே, நீட் கசிவுக்காக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்ய ஏற்கனவே 2 முறை முன்வந்ததாகவும், ஆனால் தலைமை அதை மறுத்துவிட்டதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே தன் பதவியை ராஜினாமா செய்ய பிரதான் முன்வந்ததாகவும் தலைமை அதை மறுத்ததாகவும் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜயவர்கியா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அரசு வட்டாரங்களின்படி ஜூலை 20 நடந்த மூத்த அமைச்சர் கூட்டத்தில், தன் பதவியை ராஜினாமா செய்ய பிரதான் முன்வந்தும், அவரை அப்பதவியிலேயே தொடர தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அமைச்சர் ராஜினாமா என்பது பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்வது, ஆனால் பிரச்சனைகளை தீர்க்காமல் பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்வது சரியன்று என தலைமை கருத்தியதாகவும் அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் ஜூலை 20 நடந்த 'நாடாளுமன்றம் நோக்கி' பேரணி போல மீண்டும் ஒரு பேரணியை நடத்த உள்ளதாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது சிஜேபி கூறியதால் அரசின் நிலைப்பாடு மாறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்த நிலையில் அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று கல்வி அமைச்சராக பொறுப்பேற்று அத்துறை அதிகாரிகளுடன் ஜோஷி ஆலோசனை கூட்டம் நடத்தி அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தார்.