நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் 20 முதல் 1 மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது.
இதன் விளைவாக கடந்த வாரம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு மசோதா, விரைவு நீதிமன்றங்கள், உயர்மட்ட குழு உள்ளிட்ட அறிவிப்புகளை பல மாத மௌனத்தை கலைத்து பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டார்.
இந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்த சிஜேபி கட்சி தனது அடுத்த செயல்திட்டத்தை குறித்து முடிவெடுக்க உள்ளது.
போராட்டத்திற்குப் பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே வீட்டில், முக்கிய நிர்வாகிகள் வரும் ஆகஸ்ட் 5 அன்று இதுகுறித்து ஆலோசிக்க கூடுகின்றனர்.
நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆகஸ்ட் 5 ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 5 அன்று நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துத் தங்களது அடுத்தகட்ட முடிவுகளை சிஜேபி அறிவிக்கவுள்ளது.
இதனிடையே, தனது இல்லத்தில் அப்பகுதி மாணவர்களை சந்தித்த அபிஜித் தீப்கே நேற்று நண்பர்கள் தினத்தை கொண்டாடினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்தன் எதிர்வினையாக இணையத்தில் தொடங்கப்பட்ட சிஜேபி இயக்கத்துக்கு இளைஞர்களும் மற்றும் ஜென் இசட் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது.
தொடர்ந்து நாட்டில் நடைபெற்ற நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை கையில் எடுத்த சிஜேபி தெருக்களுக்கு வந்தது. கல்வியாளர் சோனம் வாங்சுக் இப்போராட்டத்தில் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது சிஜேபி வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
தங்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நோக்கம் இல்லை என அதன் நிர்வாகிகள் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.