கேரளாவை சேர்ந்த 16 வயதான இளைஞர் ஒருவர், கடந்த ஜூன் மாதத்தில் நீட் மறுதேர்வு இணையதளத்திலும், ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு இணையதளத்திலும் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, தற்போது அந்த இளைஞரை ஐஐடி கான்பூர் நிறுவனம் சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணியில் சேர்த்துள்ளது.
கேரளாவில் உள்ள திருவல்லைக்கு அருகில் உள்ள மன்னாரை பூர்வீகமாக கொண்ட ரைலன் அணில் தற்போது தனது பெற்றோர்களுடன் துபாயில் வசித்து வருகிறார். 16 வயதான அணில் துபாயில் உள்ள சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தந்தை 1999-இல் துபாய்க்கு குடிபெயர்ந்து, அல்-பூஃட்டைம் என்ற நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அணில் தனது சிறுவயதில் இருந்தே ஹாலிவுட் படங்களான ‘தி மேட்ரிக்ஸ்’ மற்றும் ‘மிஸ்டர் ரோபோட்’ ஆகிய கதைகளில் வரும் ஹேக்கர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இவர் 8-ஆம் வகுப்பு முதலே ஹேக்கிங்-இல் தீவிரமாக ஆர்வம் கொண்டு, அதனை கற்க தொடங்கினார். இதையடுத்து இவர் 10-ஆம் வகுப்பில் Grubby.ai என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து, அதுகுறித்து புகார் அளித்தார்.
இந்த அனுபவத்தின் மூலம் அவர் ஹேக்கிங் துறையில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து இவர் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த நீட் மறுதேர்வு இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தார்.
அந்த இணையதளத்தில் நீட் தேர்வு மையங்களை நிர்வகிப்பது மற்றும் பார்வையாளர்கள் தொடர்பான தகவல்களை அணுகுவது உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட தகவல்கள் இருந்ததை அவர் கண்டறிந்தார்.
மேலும் ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தளத்துடன் தொடர்புடைய கிளவுட் சேமிப்பில் இருந்த குறைபாடுகளையும் அவர் கண்டறிந்தார்.
ஜேஇஇ இணையதளத்தில் தேர்வர்களின் அனுமதி அட்டைகளை (ஹால் டிக்கெட்) மற்றும் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பற்ற முறையில் இருந்தது அவருக்கு தெரியவந்தது
இதையடுத்து இணையதளத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, அவர் உரிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அதற்கு உரிய பதில் கிடைக்காததால், அதில் இருந்த குறைபாடுகளை பொதுவெளியில் தெரிவித்தார்.
இதற்கிடையில் அவர் பொதுவெளியில் தெரிவித்த சில நாட்களுக்குள், இணையதளத்தில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து ஐஐடி ரூர்க்கி கூறுகையில், இணையதளத்தில் உள்ள சேமிப்பகம் படிக்க மட்டுமே முடியும் என்றும், அதன் தரவுகளை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்று பதிலளித்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகம், 16 வயது இளைஞர் அணிலை அணுகி, அதன் சைபர் பாதுகாப்பு புத்தாக்க மையமான C31Hub-இல் இளநிலை சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணி அமர்த்தியுள்ளது.
இதுகுறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால் கூறுகையில், “அனிலின் பணியையும் திறமைகளையும் கண்ட பிறகு, ஐஐடி கான்பூர் குழு அவரை அணுகியது. எங்கள் பொறியாளர்கள் அவருடன் கலந்துரையாடியபோது, சைபர் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்கு வலுவான திறன்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து, அவரைப் பணியில் அமர்த்த முடிவு செய்தோம். அவர் துபாயில் வசிப்பதாலும், தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருவதாலும், ஆலோசகராகத் தொலைவிலிருந்து பணிபுரிகிறார். அவரால் முழுநேரமாகப் பணியாற்ற முடியாது. பல்வேறு இணையதளங்களின் பாதுகாப்பு பகுப்பாய்வு செய்வதே அவரது முதன்மை பொறுப்பாகும்.
அனில் ஒரு சிறுவன் என்பதால், இந்த ஒப்பந்தம் நிறைவடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. அவரது தந்தை அனில் ஆபிரகாம், அவனது பாதுகாவலராகவும் இணைப் பொறுப்பாளர் உள்ளிட்ட கடமைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அவரது பணிகள், மேற்பார்வையிடப்பட்ட, அபாயமற்ற கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
ஐஐடி-க்களில் இதுவரையில் பணியமர்த்தப்பட்டவர்களில் மிக இளைய வயதுடையவர் இவர்தான்” என்று அவர் கூறினார்.