இந்தியா

நீட் முறைகேடு: தேர்வு ரத்து, வெடித்தது போராட்டம் - அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம்!

இது நீட் மோசடி கிடையாது, நீட் தேர்வே ஒரு மோசடி தான் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்றது.

தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாக்கள் கசிந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மே 3 நடைபெற்ற தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்தது.

நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.

நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தவேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.

தேசிய தேர்வு முகமையை மறுசீரமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது நீட் மோசடி கிடையாது, நீட் தேர்வே ஒரு மோசடி தான் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் இந்தாண்டு தேர்வெழுதிய மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். டெல்லியில் நேற்று மாலை போராட்டங்கள் வெடித்தன.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எஸ்எப்ஐ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

"தேர்வு முறை நேர்மையாக இருந்திருந்தால், தேர்வுகளை ரத்து செய்யவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு நிர்பந்திக்கப்பட்டிருக்காது.

இது கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமையின் தோல்வியைத் தெளிவாகக் காட்டுகிறது" என்று காங்கிரஸ் மாணவரணி தலைவர் தெரிவித்தார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், தேசிய தேர்வு ஆணையத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.