தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது. இதில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்ததாண்டு நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதலுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாகவும், மறுதேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?
தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாக்கள் கசிந்தது விசாரணையில் அம்பலமானது.
மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது. இது மாணவர்களிடம் 20,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாள் பிரதியில் மொத்தம் 281 கேள்விகள் இருந்தன. மே 3 அன்று நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள் இந்த மாதிரி தாளில் இருந்தவற்றுடன் அப்படியே ஒத்துப்போகின்றன.
90 உயிரியல் கேள்விகளும், 45 வேதியியல் கேள்விகளும் அப்படியே அதில் இடம்பெற்றிருந்தன.
இவ்வாறு மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் போலீசார் இந்த மாதிரி தாளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேட்டின் பின்னணியில் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பயிலும், ராஜஸ்தான் மாநிலம் சூருவைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்தான் மே 1 அன்று சிகாரில் உள்ள தனது நண்பருக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அங்கிருந்து விடுதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் வழியாக இது காட்டுத்தீயாகப் பரவியுள்ளது. மேலும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இந்த வினாத்தாள் பலமுறை பகிரப்பட்டுள்ளது. இது மிக அதிக அளவிலான மாணவர்களுக்குத் தேர்வுக்கு முன்னரே சென்றடைந்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் முறைகேடு குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.
விசாரணை அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும் வினாக்கள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற உள்ளது.
ஒருவேளை இந்த தேர்வு ரத்து செய்யப்படாவிட்டால் வினாக்கள் கசிவு காரணமாக நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலிலும், மருத்துவச் சேர்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதாலேயே தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.