இந்தியாவின் ‘வெண்மைப் புரட்சியின் தந்தை’ எனப் போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளான நவம்பர் 26-ஆம் தேதி, நாடு முழுவதும் ‘தேசிய பால் தினமாக’ (National Milk Day) இன்று கொண்டாடப்படுகிறது.
பால் உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிய அவரது மகத்தான பங்களிப்பைப் போற்றும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
1970-ஆம் ஆண்டு டாக்டர் வர்கீஸ் குரியன் தலைமையில் தொடங்கப்பட்ட ‘Operation Flood திட்டம், இந்தியாவின் பால்வளத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
பால் பற்றாக்குறையால் தவித்த இந்தியாவை, உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.
இந்திய பால்வள சங்கம், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் 22 மாநில பால் கூட்டமைப்புகள் இணைந்து, 2014-ஆம் ஆண்டு முதல் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளை தேசிய பால் தினமாகக் கொண்டாடி வருகின்றன.
இன்றைய தேசிய பால் தினத்தை முன்னிட்டு, பீகார் தலைநகர் பாட்னாவில் மத்திய பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட விழாவில், சிறந்த பண்ணையாளர்களுக்கு ‘தேசிய கோபால் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுவதோடு, புதிய பால் பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியமான கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த சத்தான உணவாகப் பால் திகழ்கிறது.
இந்தியாவின் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிலையான வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் முதுகெலும்பாகப் பால்வளத் துறை விளங்குகிறது.
உலகின் மொத்த பால் உற்பத்தியில் சுமார் 24 சதவீதத்திற்கும் மேல் பங்களித்து, இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.