இந்தியா

‘எத்தனால் எரிபொருளால் சேதமடைந்த ஒரு காரைச் சொல்லுங்கள்’ - சவால் விடுத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கார் சேதத்தைத் தாண்டி இத்திட்டம் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்ய மத்திய அரசு நீண்டநாட்களாக ஆலோசித்து வருகிறது. சில தனியார் நிறுவனங்களில் எத்தனால் கலந்த எரிபொருள் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

எத்தனால் கலப்பால் மைலேஜ் குறையும், வாகனங்களின் இஞ்சின் துருபிடிக்கும் என பல்வேறு கவலைகள் பயனர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது.

மேலும் எத்தனால் கலந்த பெட்ரோல் வேண்டாம் என்று பூட்டான் நாடும் நமது எரிபொருளை நிராகரித்துள்ளது. இந்நிலையில் எத்தனால் கலந்த பெட்ரோலால் சேதமடைந்த ஒரு காரை சொல்லுங்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற விக்சித் பாரத் மாநாட்டில் பேசிய கட்கரி,

“E20 பெட்ரோலால் எந்தக் காரும் பிரச்சனைகளைச் சந்தித்ததாக இதுவரை எந்தச் சம்பவமும் இல்லை. நாட்டில் E20 பெட்ரோலைப் பயன்படுத்தியதால் பிரச்சனைகளைச் சந்தித்த ஏதேனும் கார் இருந்திருக்கிறதா? ஒன்றின் பெயரைச் சொல்லுங்கள்.

அதிக எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை பணம் கொடுத்து செய்யப்படும் பிரச்சாரங்கள்.

நாங்கள் மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்க முடிவு செய்தபோது, ​​ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தின் சந்தை விலை ரூ.1,200 ஆகவும், குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,800 ஆகவும் இருந்தது. எத்தனால் பயன்பாடு முடிவுக்குப் பிறகு, மக்காச்சோளத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,800 ஆக உயர்ந்தது.” என தெரிவித்துள்ளார்.

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிர்ப்பு ஏன்?

அரசின் எத்தனால் கலப்புத் திட்டமானது, கரும்பு, மக்காச்சோளம் மற்றும் உடைந்த அரிசி போன்ற பயிர்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிபொருளான எத்தனாலை, பெட்ரோலுடன் கலப்பதை உள்ளடக்கியுள்ளது.

இந்தத் திட்டம், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும், மாசை கட்டுப்படுத்தும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கும் என மத்திய அரசு தெரிவிக்கிறது.

ஆனால் எத்தனால் கலப்பு பழைய வாகனங்களை சேதப்படுத்தும் என பயனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதாவது எத்தனால் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால், இன்சின் துருபிடித்தல், ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் அல்லது வாகனம் திடீரென நின்றுபோகும் பிரச்னைகள் ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.

2023-க்குப் பின் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் 'E20 Material Compliant' தொழில்நுட்பத்துடன் வருவதால் புதிய வாகனங்களுக்கு இந்த பாதிப்பு இல்லை.

கார் சேதத்தைத் தாண்டி இத்திட்டம் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எத்தனால் தயாரிக்க கரும்பு, சோளம் மற்றும் உடைந்த அரிசி போன்ற உணவுப் பயிர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எத்தனால் தேவை அதிகரிக்கும் போது, உணவுத் தேவைக்கான நிலங்கள் எரிபொருள் பயிர்களுக்காக மாற்றப்பட்டு உணவுப் பற்றாக்குறை அல்லது விலைவாசி உயர்வு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.