ஐ.இ.டி குண்டு தாக்குதல் 
இந்தியா

ஐ.இ.டி குண்டு தாக்குதல்.. நாகாலாந்தில் அசாம் ரைபிள்ஸ் வீரர் வீரமரணம்.. 4 பேர் படுகாயம்

அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

நாகலாந்தில் ஐஇடி வெடிகுண்டு தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் வீரர் கொல்லப்பட்டார். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

நாகலாந்து மாநிலத்தின் சுமுகேடிமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் நேற்று வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

தாக்குதல்

அப்போது சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஇடி வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் வாகனத்தில் இருந்த ஹவில்தார் முகமது இக்பால் மற்றும் நால்வர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் முகமது இக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற நால்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

இந்த தாக்குதலைதொடர்ந்து, சுமுகேடிமா மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

ஐஇடி குண்டு வெடித்த இடத்தை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு எதற்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அஞ்சலி

நாட்டிற்காகத் இன்னுயிரை தியாகம் செய்த ஹவில்தார் முகமது இக்பாலுக்கு அசாம் ரைபிள்ஸ் படை வீரவணக்கம் செலுத்தியுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் படைஅவரது குடும்பத்தினருடன் உறுதியாகத் துணை நிற்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.