மைசூரு தசரா ஊர்வலத்திற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் விழா ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய அம்சமான 'ஜம்பூ சவாரி' எனப்படும் தசரா யானைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அரண்மனை வளாகத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட ஊர்வலம் மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பைக் பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க வசதியாக, சிறப்பு 'தங்க அட்டைகள்' விநியோகிக்கப்பட உள்ளன. இதற்கான கட்டணம் ரூ. 2,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மைசூரு மாவட்ட ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த தசரா ஊர்வலத்திற்குத் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி, சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது குறித்துக் கர்நாடக அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என்றார்.
"தசரா விழாவில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்வது குறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் முடிவெடுப்பார். இது தொடர்பான ஆலோசனைகள் உயர்மட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. தென்னிந்திய முதல்வர்களின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தானே வெளியிடுவார்" என்று ஆட்சியர் விளக்கமளித்தார்.
அடுத்த மாதம் 21-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் ஊர்வலத்தில் ரூ. 2,000 மதிப்பிலான தங்க அட்டையைப் பெறுபவர்கள், அரண்மனை வளாகத்தில் சிறப்பு இருக்கைகளில் அமர்ந்து ஊர்வலத்தைக் காணலாம். ஊர்வலத்தில் கர்நாடகத்தின் கலாசாரம் மற்றும் சாதனைகளை விளக்கும் பல்வேறு வண்ணமயமான ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள் என்பதால், மைசூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.