மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக போராடி வரும், மனோஜ் ஜராங்கே தனக்கு 500 கோடி ரூபாய் அனுப்பிய வகையில் பெண் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டதன் விளைவாக, பாஜக மற்றும் சிவசேனா இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனோஜ் ஜராங்கே போராடி வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில் பெண் ஒருவர் பாஜக-விடம் இருந்து சிவசேனா கட்சித் தலைவர் ஏக் நாத் ஷிண்டேயின் மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே வழியாக 500 கோடி ரூபாயை மனோஜ் ஜராங்கே பாட்டீலுக்கு அனுப்பப்பட்டது என்று இடம் பிடித்துள்ளது.
ஜராங்கே பாட்டீல், தான் யாரிடமும் பணம் கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக ஸ்ரீகாந்த் ஷிண்டே பாஜக-விடம் பணம் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்படுவது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
ஸ்ரீகாந்தின் தந்தையும் துணை முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, இதில் அவருக்கு எதிரான ஒரு சதி எனக் கூறுகிறது.
இந்த விவகாரத்தில் பணம் தங்கள் கட்சியுடன் தொடர்புடையது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியில் ஒரு சதி இருப்பதாக பாஜக தெரிவிக்கிறது.
சிவசேனா தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராம்தாஸ் கடம், பாஜக-வின் ஒரு தரப்பினர் ஏக்நாத் ஷிண்டேவை (ஸ்ரீகாந்தின் தந்தை) அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட சதி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மேலவை உறுப்பினர்கள் பிரவீன் தரேகர் மற்றும் பிரசாத் லாட் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்ட கடம், பிரசாத் லாட் மற்றும் ஜராங்கே பாட்டீல் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படங்களையும் காட்டி இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
சட்ட மேலவையில் பாஜக குழு தலைவரான தரேகர் மற்றும் லாட் ஆகியோர் இதற்கு பதிலடி கொடுத்தனர். தாங்கள் குற்றம் சாட்டப்படுவதை பாஜக பொறுத்துக்கொள்ளாது என்று கூறிய அவர்கள், கடம் "சஞ்சய் ராவத் போல மாறக்கூடாது" என்று எச்சரித்தனர். (சஞ்சய் ராவத் என்பவர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா (யுபிடி) பிரிவைச் சேர்ந்த தலைவர். இவர் அடிக்கடி பாஜகவை விமர்சிப்பவர்).
முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு எதிராக ஜராங்கே பாட்டீலுக்குப் பின்னாலிருந்து ஆதரவு அளித்தது யார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று கூறிய லாட், அதற்கு பாஜக அதே பாணியில் பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்தார்.
நான் 500 கோடி ரூபாயைக் கொடுக்கவும் இல்லை, வாங்கவும் இல்லை என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் பீட் (Beed) பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜக தரப்பில் தமக்கு ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலமாக 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக பேச்சு அடிபடுவதாக ஜராங்கே பாட்டீல் குற்றம் சாட்டியிருந்தார். வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் அதற்கான ஆடியோவை வெளியிட்டார். ஆனால், அதில் பேசிய மூன்று அல்லது நான்கு நபர்கள் யார் என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் முன்பே ஜராங்கே பாட்டீல் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்த்திருக்க வேண்டும் என்றும், அவரிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதை உரிய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
இதற்கிடையில், பட்னாவிஸ் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனை தரப்பினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.
நேற்று முன்தினம், ஷிண்டே தரப்பு பிரதிநிதிகள் தன்னை சந்தித்ததை தொடர்ந்து, அந்த ஒலிப்பதிவுத் துணுக்கை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
"எல்லோரிடமும் ஒரே கேள்விதான் உள்ளது. இரண்டரை ஆண்டுகள் கழித்து, இப்போது ஏன் இத்தகைய உரையாடல்கள் வெளிவந்துள்ளன?" என்று பட்நாவிஸ் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.