இந்தியா

Manipur: காணாமல் போன 2 இளைஞர்களின் சிதைந்த உடல்கள் சாக்கு பையில் மீட்பு - மக்கள் போராட்டம் கண்ணீர் புகைகுண்டு வீசி கலைப்பு

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றபோது பல போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.

மணிப்பூரில் காணாமல் போன இரு இளைஞர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தபாவு குகி கிராமத்தை சேர்ந்த டி. சோங்லாய் (21) மற்றும் பாவோகின்லால் ஹாங் சிங் (20) ஆகியோர் அக்டோபர் 29 அன்று காணாமல் போயினர்.

உடல்கள்

காங்போக்பி மற்றும் சேனாபதி மாவட்டங்களின் எல்லையில் பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரண்டு குக்கி இளைஞர்களின் சிதைக்கப்பட்ட உடல்கள், சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் சணல் பைகளுக்குள் கட்டப்பட்ட நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டன.

போராட்டம்

உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காங்போக்பி மாவட்டத் தலைமையகத்தில், 'நாகா கிளர்ச்சியாளர்களால்' இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டி, போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர்.

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றபோது பல போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.

கடத்தல்

பாஜக ஆளும் மணிப்பூரில் நாகா - குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023 முதல் வன்முறை நிலவி வரும் சூழலில் இரு தரப்பிலும் உள்ள கிளர்ச்சியாளர்கள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு அண்மை காலமாக மக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. அண்மையில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட மூவரின் உடல்கள் முதலமைச்சர் இல்லம் முன் வைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

2023 இல் வெடித்த மணிப்பூர் வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட அவலமும் அரங்கேறியது. பாலியல் வன்கொடுமை - கொலை சம்பவங்களும் அரங்கேறின.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து தற்போதுவரை முகாம்களில் வசித்து வருகின்றனர். இடையில் பைரன் சிங் தலைமையலான பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றது. மீண்டும் கேம்சந்த் சிங் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

SCROLL FOR NEXT