மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களான இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், கக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வெடித்துள்ள வன்முறை மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில் இன்று மதியம் 2 மணிமுதல் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள துரோங்லோபி அவாங் லெய்காய் கிராமத்தில் நடந்த ஒரு சோகமான மற்றும் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 1 மணியளவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் ஒரு வீட்டின் மீது நடத்திய தாக்குதலில், அதில் உறங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் மற்றும் அவனது 5 மாத தங்கை ஆகிய இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் காயமடைந்த தாய் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் கிராம மக்களிடையே கோபத்தை தூண்ட அவர்களின் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின்போது குறைந்தது மூன்று லாரிகளுக்குத் தீ வைத்தனர்.
மேலும், பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே வெடிக்காத நிலையில் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது. அதனைப் பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்ய வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது இன்னும் பதற்றத்தை கொடுக்க நிலைமை மோசமடைவதை தடுக்கவும், தவறான தகவல்கள் பரவாமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொபைல் டேட்டா, பிராட்பேண்ட், விசாட் மற்றும் விபிஎன் ஆகிய அனைத்து வகையான இணையச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.