மும்பை கோரேகான் பகுதியில் வசித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான குடும்ப வன்முறை மற்றும் மன உளைச்சல் புகார்களை குற்றச்சாட்டுகளாக முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக மும்பை கோரேகான் காவல் நிலையத்தில் ஜூலை 31 அன்று அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'ரப் ஸே ஹை துவா' தொடர் மூலம் இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்த அதிதி சர்மாவின் இந்த திடீர் புகார், ஒட்டுமொத்த சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2021 ஜூன் மாதம் நடந்த ஆன்லைன் நடிப்புப் பயிற்சி வகுப்பின் போது அதிதிக்கும் அபினீத் வித்யானந்த் கௌஷிக்கிற்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
பின்னர், இருவீட்டாரின் முழுச் சம்மதத்துடன் கடந்த 2024 நவம்பர் 12 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அபினீத்தின் அசல் முகம் தெரியத் தொடங்கியதாக அதிதி குறிப்பிட்டுள்ளார்.
ஆடை அணியும் விதம் மற்றும் அன்றாட வீட்டுச் செலவுகளுக்குப் பணம் தராமல் அதிதியிடமே பணம் பறிப்பது எனப் பல தொல்லைகளை அவர் கொடுத்து வந்ததாக காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி தெரிய வந்துள்ளது.
கடந்த 2025 புத்தாண்டு அன்று, வீட்டில் காபி அருந்தும் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் அவர்களின் குடும்பத்தையே உடைக்கும் அளவிற்குப் பெரிய சண்டையாக உருவெடுத்துள்ளது.
அதன்பிறகு அதிதியின் நடத்தை மீது அபினீத் கடுமையான சந்தேகப் புத்தியுடன் செயல்படத் தொடங்கியுள்ளார். அதிதிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரது மொபைல் போனை அடிக்கடி சோதனை செய்துள்ளார்.
மேலும், அதிதியை அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் பேசாவிட்டால் முற்றிலும் தனிமைப்படுத்தி, தனி அறையில் தக்க வைத்துள்ளார் என்பதையும் கூறியுள்ளார்.
கணவரின் கொடுமைகளுக்கு அவரது தாயார் ஊர்மிளா கௌஷிக் மற்றும் சகோதரி கீர்த்தி கௌசிக் ஆகியோரும் முழு உடந்தையாக இருந்துள்ளனர்.
அதிதிக்குத் திருமணத்தின் போது போடப்பட்ட வைர மோதிரம், தங்கச் சங்கிலிகள், வளையல்கள் மற்றும் மாங்கல்யம் உள்ளிட்ட ஒட்டுமொத்த 'ஸ்திரீதன' நகைகளையும் அவரது மாமியார் பறித்து வைத்துக் கொண்டு திருப்பித் தர மறுத்துள்ளார்.
குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க முயன்ற போதெல்லாம், மாமியாரும் நாத்தனாரும் அபினீத்தின் பக்கமே நின்றதாகவும் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகை அதிதி சர்மா கொடுத்த இந்த விரிவான புகாரின் அடிப்படையில், அவரது கணவர் அபினீத், மாமியார் ஊர்மிளா மற்றும் நாத்தனார் கீர்த்தி ஆகிய மூவர் மீதும் கோரேகான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், இக்குற்றச்சாட்டுகள் குறித்து குற்றம் சாட்டப்பட்ட அபினீத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும், விளக்கமும் பொதுவெளியில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.