ஜிகு ஜிகு ரெயிலு...
இப்படித்தான் ரெயில் பயணத்தை வர்ணிப்பார்கள். தொலை தூரங்களுக்கு இரவிலும் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ரெயில் பயணம் ஒரு வரப்பிரசாதம்.
2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில்தான் அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. பெட்டிகளிலும் பயணம் செய்வதை ரெயில் பயணிகள் விரும்புகிறார்கள்.
இதற்கு காரணம் வீடுகளில் தூங்குவதை போல் தூங்கிக் கொண்டு இரவு நேரங்களில் ஏற்படும் இயற்கை உபாதைகளை வீடுகளில் கழிப்பது போலவே கழித்தபடியும் பயணிக்கலாம் என்பதுதான். இதற்காக ரெயில்வே நிர்வாகம் எவ்வளவோ வசதிகளை செய்தாலும் பயணம் சொகுசாக இல்லை... கழிவறை சுத்தமாக இல்லை... தண்ணீர் வரவில்லை... என்ற குறைபாடு பயணிகளிடம் இருக்கிறது.
இந்த நிலையில்தான் வந்தே பாரத் என்ற புதிய ரெயிலை ரெயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்படும் இந்த ரெயில்களுக்கு மவுசு அதிகம் உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி மற்றும் சொகுசான இருக்கைகள், சுத்தமான பராமரிப்பும் இருப்பதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரம் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளும் தூங்கும் வசதிகளாக மாறி வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் பயணிகளிடம் ஏற்பட்டது. தற்போது பயணிகள் கனவை நனவாக்கும் வகையில் வந்தே பாரத் ரெயிலிலும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் தயாராகி வருகிறது.
முதல்கட்டமாக முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த பெட்டியின் வடிவமைப்பு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அதை பார்த்ததும் ரெயில் பயணிகள் மூக்கின் மீது விரலை வைக்காத கதைதான். பிளாட்பாரத்தில் இருந்து ரெயிலுக்குள் ஏறியதும் ஓட்டல் அறைக்கு நடந்து செல்லும் பாதையை போல் நீண்டு செல்கிறது பாதை. அதன் ஓரத்தில் வரிசையாக அறைகள். எந்த அறைக்குள் நாம் பயணிக்க வேண்டுமோ அந்த அறை கதவை திறந்து உள்ளே சென்றால் ‘வாவ்... இது ரெயில் பெட்டியா...? இல்லை சொகுசு விடுதியா என்று நினைக்கும் அளவுக்கு உள்கட்ட வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது. 4 பேர் பயணிக்கும் இந்த அறைக்குள் மேல்படுக்கைக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக ரெயில் பெட்டிகளில் மேல்படுக்கைக்கு செல்வதற்கு ஏணி போன்ற அமைப்புதான் இருக்கும். அதில் ஏறுவதற்கு முதியவர்களும், பெண்களும் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இப்போது வீடுகளில் படிக்கட்டுகளில் ஏறி செல்வது போல் இந்த பெட்டியில் வடிவமைப்பு செய்துள்ளனர்.
மேலும் மின்விளக்கு அலங்காரங்கள் ஓட்டல் அறைகளை பிரதிபலிக்கின்றன. கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் என ஒவ்வொன்றும் தண்டவாளத்தில் பறக்கும் நவீன நட்சத்திர விடுதியை தான் நினைவுப்படுத்துகின்றன. முதல் தூங்கும் வசதி கொண்ட இந்த ரெயில் பெங்களூரு- மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. இரவு முழுவதும் இந்த வழித்தடத்தில் சாதாரண விரைவு ரெயில்களில் பயணித்த பயணிகள் இனி சொகுசான ஓட்டல் அறைக்குள் இருந்து, தூங்கி உற்சாகமாக எழுந்து வரலாம்.
இப்போது பெங்களூரு - மும்பை வழித்தடத்தில் இயக்கினாலும், அடுத்தடுத்து மற்ற நகரங்களுக்கும் இந்த வந்தே பாரத் ரெயில் வரும். இவ்வளவு வசதி இருக்கே கட்டணம் எப்படி இருக்குமோ? என்ற எண்ணமும் வரும். பஸ் பயணத்திற்கும், ரெயில் பயணத்திற்கும் வித்தியாசம் உண்டு. அதேப்போல் ரெயில் பயணத்திற்கும், விமான பயணத்திற்கும் வித்தியாசம் இருக்கும். இது தரையில் ஓடும் விமானத்தை போன்றது. எனவே கட்டணமும் அதற்கு ஏற்ப மாறுபடத்தான் செய்யும். இன்னும் ரெயில்வே நிர்வாகம் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்கவில்லை.