இந்தியா

மும்பை - புனே முக்கிய ரெயில் பாதையில் பெரும் நிலச்சரிவு : 16 ரெயில்கள் ரத்து

கர்ஜத் - லோனாவாலா மலைப்பகுதியில் 480 மி.மீ மழை பதிவானதால் தண்டவாளத்தில் நிலச்சரிவு..

கர்ஜத் - லோனாவாலா மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மும்பை - புனே முக்கிய ரெயில் பாதையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பாதையில் ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

பாதிப்பு விவரங்கள்..

மத்திய ரெயில்வேயின் மும்பை கோட்டத்திற்கு உட்பட்ட தாக்குர்வாடி மற்றும் மங்கி ஹில் லூப் கேபின் இடையே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த இந்திராயணி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், டெக்கான் குயின், பிரகதி எக்ஸ்பிரஸ் மற்றும் சின்ஹகாட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 16 முக்கிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், அகமதாபாத் - கோலாப்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர் - CSMT மெயில் உள்ளிட்ட 9 ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ரயில்வே அமைச்சர் ஆய்வு..

நிலச்சரிவு குறித்து மத்திய ரெயில்வே பொது மேலாளர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவாவிடம் கேட்டறிந்த ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மேற்கு மற்றும் மத்திய ரெயில்வே அதிகாரிகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 480 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு..

மும்பை - புனே ரெயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை அடுத்து, பயணிகள் தகவல்களை உடனுக்குடன் பெற முக்கிய ரெயில் நிலையங்களில் 24 மணி நேர அவசர உதவி எண்கள் (CSMT:022-22694040, தாணே: 9321336747, லோனாவாலா: 8356854238, தாதர்: 9136452387, கல்யாண்: 8356848078) அறிவிக்கப்பட்டுள்ளன.

சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் பயணத்தைத் தொடங்கும் முன் ரெயில்களின் தற்போதைய நிலையை இந்த எண்கள் மூலம் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.