மும்பை பைதோனி பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 44). இவரது மனைவி நஸ்ரின் (35). இவர்களது மகள்கள் ஆயிஷா (16) மற்றும் ஜைனப் (12). இவர்கள் கடந்த மாதம் 26-ந் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றனர். உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால். அங்கு சிகிச்சை பலனின்றி தந்தை, தாய் மற்றும் 2 மகள்களும் சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், அப்துல்லா வீட்டில் இருந்த தர்பூசணி, பிரியாணி, தண்ணீர், மசாலா பொருட்கள் உள்ளிட்ட 11 மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். இந்த மாதிரிகளை ஆய்வு செய்த மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) முதற்கட்ட சோதனைக்கு பிறகு அந்த உணவு பொருட்களில் எவ்வித கலப்படமும் இல்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜே.ஜே ஆஸ்பத்திரி டாக்டர் சஞ்சய் சுரசே கூறுகையில், "பொதுவாக சாதாரண உணவு விஷத்தன்மை அடைந்தால் இவ்வளவு வேகமாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இவர்களது உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்துள்ளது. எனவே, இது வெறும் உணவு நச்சாக (புட் பாய்சன்) இருக்க முடியாது. வேறு ஏதேனும் தீவிரமான விஷத்தன்மை கொண்ட பொருள் காரணமாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த குடும்பத்தினர் சாப்பிட்ட உணவு பொருட்களில் பாக்டீரியா தொற்று உள்ளதா? அல்லது ஏதேனும் விஷம் கலந்திருக்கிறதா என்பதை கண்டறிய கலிணா தடயவியல் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பிறகு தான் 4 பேரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.