இந்தியா

200 டன் எடை கொண்ட கிரேன் கவிழ்ந்து சாலையில் சென்றுகொண்டிருந்த காவலர் பலி | Maharastra

படுகாயங்களுடன் வாஷி பகுதியிலுள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் அடுத்த மன்குர்த் பகுதியில் உள்ள சியோன்-பன்வெல் நெடுஞ்சாலையில், மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 200 டன் எடை கொண்ட கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில், காவலர் சந்தோஷ் சாவன் உயிரிழந்தார்.

மும்பை கிழக்கு மண்டல பிரிவுக்கு பொறுப்பு காவலராக பணியாற்றி வரும் 48 வயதான சந்தோஷ் சாவன், பணி முடிந்து இரவு 9.45 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, டாடா பவர் ஹவுஸ் அருகே கிரேன் கவிழ்ந்து காவலர் மீது விழுந்துள்ளது.

இந்த நிலையில் படுகாயங்களுடன் வாஷி பகுதியிலுள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து செம்பூர் மற்றும் வாஷி பகுதியை இணைக்கும் இந்த வழித்தடத்தில், நேற்று புதன்கிழமை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த மும்பை மாநகராட்சியின் உயரதிகாரி, பணித்தளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த கனரக வாகனம், வேறு இடத்திற்கு நகர்ந்த போது கவிழ்ந்து, இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து உயிரிழந்த காவலரின் சகோதரர் பார்க்சைட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் அவருடன் தொடர்புடைய பணியாளர்கள் மீது, அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்குர்த் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.