இந்தியா

‘பணம் கொட்டும்’... சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை - மந்திரவாதி உட்பட 4 பேர்மீது வழக்குப்பதிவு!

பக்தி எது, மூட நம்பிக்கை எது என்பதில் மக்கள் தெளிவுப்பெற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது, பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பெண் ஒருவர் சாலையில் நின்று ஆன்மிகவாதி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கதறி அழுதார்.

ஆனால் அங்கு இருப்பவர்கள் யாரும் அவருடைய பேச்சை கேட்காமல் அந்த ஆசாமியை பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இதேபோன்ற ஒரு பாணியில் ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார். அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வழிபாடு என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்கள்

மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஹேமந்த் என்ற போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.

அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, ஹேமந்த் தவறான இடங்களில் சிறுமியை தொட்டுள்ளான். தொடர்ந்து முதல் பூஜை முடிந்தும் பலனளிக்கவில்லை என்று, மீண்டும் பூஜை செய்ய குடும்பத்தினரை சம்மதிக்க வைத்துள்ளனர்.

சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு (ஆகஸ்ட் 8 அன்று), ஹேமந்த், அவனது மகன் பாலசுப்ரமணியம் மற்றும் விஜய் குமார் ஆகியோருடன் மீண்டும் அங்கு வந்து, மீண்டும் பூஜை செய்துள்ளனர். தொடர்ந்து மறுநாளே ஆக.9ம் தேதி சிறுமியையும், அவரது தாயாரையும் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வெங்கடேஷ் யாதவ் என்ற மற்றொரு ஆசாமி முன்பும் வழிபாடு என்ற பெயரில் அந்த சிறுமி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர், தாயும் மகளும் பாக்கியலட்சுமி என்ற பெண்ணின் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி, மீண்டும் சிறுமியை வழிபாடு என்ற பெயரில் அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நீண்ட நாட்களாக இவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த ஊர்மக்கள், சந்தேகம் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அறிந்தவர்கள் சிறுமியையும், தாயையும் இறக்கிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், கடப்பா ஒன் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.

பின்னர், சம்பவத்தின் சூழ்நிலைகளின் அடிப்படையில், இந்த வழக்கு அனந்தபுரம் ஒன் டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.