இந்தியா

ரூ.200 கோடி பணமோசடி வழக்கு: பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய நீதிபதி உத்தரவு

அதிதிசிங் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் 15 பேரை அமலாக்கத்துரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இரட்டை இலை சின்னம் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்று தருவதாக கூறி, டிடிவி தினகரினிடம் லஞ்சம் பெற்றதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு டெல்லி காவல்துறையால் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து விடுதலையாகி வெளியே வந்த அவரை, கடந்த 2021-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை மீண்டும் கைது செய்தது.

இம்மனு டெல்லி மாவட்ட விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது வாதாடிய அமலாக்கத்துரை,

“சுகேஷ் சந்திரசேகர் சிறைக்குள் இருந்தபடியே பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் சட்டம் நீதி அமைச்சகம் ஆகியவற்றின் அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து வந்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட 15 பேர், போலி அழைப்புகள், புனையப்பட்ட அடையாளங்களை பயன்படுத்தி புகார்தாரர் அதிதிசிங் மற்றும் அவரின் குடும்பத்திடம் பெரும் தொகையை இழக்க தூண்டியுள்ளனர்.

மிரட்டி பணம் பறித்தல், மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றின் மூலம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈட்டியுள்ளனர்.

குற்றச்செயல்களின் மூலம் கிடைத்த பணத்தை ஹவாலா வழிகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் மாற்றி, சொத்துக்கள் மற்றும் உயர் ரக வாகனங்களை வாங்கியுள்ளனர்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ், தொடர்ச்சியாக சந்திரசேகருடன் தொடர்பில் இருந்து, அவரிடமிருந்து மதிப்புமிக்க பரிசுகளைப் பெற்றுள்ளார்” என்று வாதிட்டது.

இதையடுத்து கூடுதல் அமர்வு நீதிபதி பிரஷாந்த் சர்மா, அனைத்து குற்றவாளிகள் மீதும் வலுவான ஆதாரங்கள் உள்ளதால், 15 பேர் மீதும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT