இந்தியா

தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. "மோடியின் தந்தையும் போவார்.." என கார்கே பேசிய சம்பவத்தில் திருப்பம்

கார்கேவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தந்தை குறித்து கார்கே பேசிய சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சரான கிருஷ்ண சிங்கின் 139வது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே கலந்துகொண்டார்.

கார்கே பேச்சு

அதில் அவர், ​​ வாக்குத் திருட்டுக்கு பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பார்வையாளர்களில் இருந்த சந்தோஷ் குமார் என்ற நபர், "மோடி போகமாட்டார்" என்று கோஷமிட்டார்.

இதனால் கோபமடைந்த கார்கே, "மோடி என்ன... மோடியின் தந்தையும் போவார்" என்று 2 முறை கூறினார்.

இதன் பின் காங்கிரஸ் தொண்டர்கள் சந்தோஷ் குமாரை தாக்கி அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தின் காணொளி வைரலாகி பாஜக தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கார்கேவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

திருப்பம்

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து அடித்து வெளியே துரத்தப்பட்ட சந்தோஷ் குமார் ஊடகங்களிடம் பேசியபோது புது விளக்கம் ஒன்றை அளித்தார்.

அதாவது, "அவர்கள் எனது சில வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டனர். 'நாட்டில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தாலன்றி மோடி பதவி விலக மாட்டார்' என்று கூறினேன்.

உண்மையில், மோடி பதவி விலக வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஆனால், அவர்கள் நான் சொன்னதில் பாதியை மட்டுமே கேட்டுவிட்டு என்னைத் தாக்கினார்கள்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT