ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா, தமிழக பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா,மகாராஷ்டிரா முதலவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஏனைய அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
முதலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார். பவன் கல்யாணும் அவரது அண்ணன் சிரஞ்சீவியும் மோடியை மேடைக்கு நடுவே அழைத்து வந்து கைகளைக் கோர்த்து உயர்த்திக்காட்டினர்.
அவர்கள் இருவருடனும் மோடி குதூகலமாக உரையாடினார். அப்போது ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் மேடைக்கு வரவே சந்திரபாபு நாயுடு மோடியை அவர்களிடம் அழைத்துச்சென்றார். ரஜினிகாந்த்துடன் கை குலுக்கிய மோடி, லதா ரஜினிகாந்திடம் நலம் விசாரித்தார். பின்னர் அருகில் நின்றிருந்த பாலகிருஷ்ணா, தமிழிசை ஆகியோருக்கு உற்சாகமாக வணக்கம் வைத்தார். பிரபலங்கள் பலர் ஓரே மேடையில் நிறைந்திருந்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.