இந்தியா

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

சுதந்திர தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி' எனப்படும் ,' ஹர் கர் திரங்கா' என்ற இயக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றி Harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் இதனை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹர் கர் திரங்கா இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்போம். 'விக்சித் பாரத்'தை உருவாக்குவதில் பங்களிக்க நமது கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம். இந்த ஆண்டுக்கான முயற்சிகள் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதிலும், அதுவும் அப்பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இது அமைந்திருப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையிலும், நாட்டின் பெருமை, ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என பதிவிட்டுள்ளார்.