இந்தியா

காங்கிரஸை 59 முறை குறிப்பிட்டு.. விரக்தியில் பேசும் மோடி.. பெண்கள் இடஒதுக்கீட்டை இப்போதே அமல்படுத்துங்களேன் - கார்கே

பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை இப்போதே இருக்கும் 543 தொகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் அதை 2029-க்கு தள்ளிப்போடுவது பெண்களை ஏமாற்றும் செயல்.

மத்திய அரசின் 12 ஆண்டு கால ஆட்சியில் எவ்வித சாதனையும் இல்லை என்றும், பிரதமர் மோடி ஏமாற்றத்தில் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மகளிர் இடஒதுக்கீடு - தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் மக்களவையில் தோற்கச் செய்தது பெண்களுக்கு எதிரான அநீதி, சிசுக் கொலையை ஒத்தது என கடுமையாக சாடினார்.

இந்நிலையில் மோடி விரக்தியில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

"கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில் உருப்படியாக எதையும் காட்ட முடியாத விரக்தியில் இருக்கும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கான அதிகாரப்பூர்வ உரையை, வெறும் அரசியல் பேச்சாகவும், அப்பட்டமான பொய்கள் நிறைந்ததாகவும் மாற்றிவிட்டார்.

பிரதமர் தனது உரையில் காங்கிரஸை 59 முறை குறிப்பிட்டுள்ளார், ஆனால் பெண்களைப் பற்றி சில முறையே பேசியுள்ளார். இதிலிருந்தே நாட்டின் மீது அவருக்கு இருக்கும் அக்கறை என்னவென்று புரிகிறது.

பெண்களுக்கு பாஜக முன்னுரிமை அளிக்கவில்லை, காங்கிரஸையே குறிவைக்கிறார்கள். ஏனெனில் காங்கிரஸ் எப்போதும் வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்கிறது.

பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை இப்போதே இருக்கும் 543 தொகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் அதை 2029-க்கு தள்ளிப்போடுவது பெண்களை ஏமாற்றும் செயல்.

2010-லேயே காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களவையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது, ஆனால் பாஜக அதை மக்களவையில் நிறைவேற்ற விடாமல் தடுத்தது.

பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, விண்வெளி ஆய்வு மற்றும் 1991 பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அனைத்தும் காங்கிரஸின் சாதனைகளே.

ஹத்ராஸ், உன்னாவ் மற்றும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது பாஜக நடந்து கொண்ட விதம் அவர்களின் பெண் விரோதப் போக்கைக் காட்டுகிறது.

தேசிய குற்றபதிவேட்டின்படி, பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் பெண்களுக்கு எதிரானத, அவர்கள் அரசியலமைப்பை விட மனுஸ்மிருதிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் சேற்றை வாரி இறைக்கிறார். இதற்காக அவர் 140 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் கார்கே வலியுறுத்தினார்.