டெல்லியில் போராட்டம் நடத்த இருந்த சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டு பின்பு நீதிமன்ற நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இந்தியாவுக்கே ஒரு அவமானம் என தீப்கே தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு ஆதரவளிக்க கோரி சிஜேபி கட்சி நேற்று 'டெல்லி சலோ' என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து சிஜேபி அறிவித்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரசியல் கட்சி தலைவர்களும், இளைஞர்களும் டெல்லி நோக்கி படையெடுத்தனர்.
சிஜேபி அறிவிப்பை தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதாகவும், அனுமதியற்ற கூட்டங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து டெல்லிக்கு செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 40,000 அதிகமான அளவில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற 2,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்த சிஜேபி கட்சியை சேர்ந்த அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிஜேபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டாலும், ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி தெரிவித்தது.
இதையடுத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சிஜேபி கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஓராண்டு காலத்திற்கு நாட்டில் அமைதியை காக்கும்படி நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட தீப்கே, பிரதமர் மோடி இந்தியாவுக்கே ஒரு அவமானம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமராக மோடி இந்தியாவிற்கு ஒரு அவமானம். இவரை விட பெரிய கோழையையும் பிறரை அச்சுறுத்தி அடக்குபவரையும் இந்த நாடு கண்டதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த துயரமான தருணத்தில் என் குடும்பத்தினருடன் இருப்பதற்காக என் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருக்கிறேன்.
செளரவ் தாஸ் மற்றும் ஆஷுதோஷ் ஆகிய இருவரும் விரைவில் டெல்லியில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவார்கள்.
காக்ரோச் ஜனதா கட்சி பின்வாங்கவோ அல்லது எந்தவிதமான அச்சுறுத்தலுக்கோ அடிபணியாது.
அக்டோபர் 10 இந்த சர்வாதிகாரத்தின் முடிவின் தொடக்கமாக வரலாற்றில் பதியப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.