சோனியா காந்தி
இந்தியா

மோடி அரசு மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்துகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு

வினாத்தாள் லீக்கிற்கு பொறுப்பேற்க வலியுறுத்தி போராட்டம் நடத்தும் மாணவர்களை மோடி அரசு தேச விரோதியாக நடத்துகிறது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனத்துடனும் கொடூரத்துடனும் பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்தியுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உயர்க்கல்வியில் உள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தி வந்தன. ஆனால், இரண்டு வலியுறுத்தலுக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், கடந்த ஜூன் 20-ந்தேதி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.

நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் பேரணி

கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டு வீசி பேரணியை கலைத்தனர். ஜந்தர் மந்தரில் தொடர்ந்து பேராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனால் மத்திய அரசு, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. பிரதமர் மோடி, வினாத்தாள் லீக் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்

ஆனால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். டெல்லி போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நீடித்துள்ளது. கைது செய்யப்படும் நபர்களை வழக்குப் பதிவு செய்யப்படாமலேயே ஒரு வருடம் சிறையில் அடைக்க முடியும். மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுது்த மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, மாணவர்கள் போராட்டத்தை தூண்டு விடுவதாகவும், அவர்களை தேசவிரோதிகள் என்ற முத்திரை குத்தவும் முயற்சி நடைபெற்ற வருவதாக குற்றமும் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டு வரும் நிலையில், அவர்களை அவர்களை தேசவிரோதிகள் போன்று நடத்துகிறது என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சோனியா காந்தி கூறியதாவது:-

மாணவர்கள் போராட்டங்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சில காரணிகளின் இயல்பான விளைவுகளாகும். அதாவது, நம்பிக்கையற்ற சூழலை மட்டுமே உருவாக்கும் இன்றைய கல்விச் சூழல் மற்றும் பொறுப்புக்கூறவோ அல்லது ஆக்கபூர்வமாகச் செயல்படவோ விரும்பாத மோடி அரசாங்கத்தின் வழக்கமான ஆணவம் ஆகியவையே அக்காரணிகளாகும்.

2020-ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) சட்டம்- தேசிய குடிமக்கள் பதிவேடு போராட்டங்களின்போது, ​​ஆயுதமேந்திய காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பல்கலைக்கழக வளாகங்களை எவ்வாறு சூறையாடினர் என்பது நம் அனைவருக்கும் தெளிவாக நினைவிருக்கிறது. இந்தியாவின் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல்களை நம் நினைவுகளிலிருந்து ஒருபோதும் அழிக்க முடியாது.

மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை. இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனத்துடனும் கொடூரத்துடனும் பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்தியுள்ளது.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.