இந்தியா

பெங்கால் சுற்றுலாவின் மிகப்பெரிய பிராண்ட் தூதர் பிரதமர் மோடி: அபிஷேக் பானர்ஜி

பிரதமர் மோடியால் கங்கை எவ்வளவு அழகு, சாலைகள் மேம்பட்டவை என்பது இந்திய மக்களுக்கு தெரிந்துள்ளது என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அடிக்கடி அம்மாநிலத்தில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி பெங்கால் சுற்றுலாவின் மிகப்பெரிய பிராண்ட் தூதர் என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அபிஷேக் சர்மா ஹவுரா மாவட்டத்தில் நடைபெற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டதில் கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி கங்கை ஆற்றங்கரையோரம் நடந்து சென்றது, சாலையோர கடையில் ஜால்முரி வாங்கிய சம்பவம் இல்லாமல் இருந்திருந்தால் கங்கை எவ்வளவு அழகு வாய்ந்தது, ஜார்கிராமின் சாலைகள் எவ்வளவு மேம்பட்டவை என்பதை நாட்டின் மக்கள் அறிந்திருக்கவோ அல்லது புரிந்திருக்கவோ மாட்டார்கள். மம்தா பானர்ஜியின் மா-மாட்டி-மானுஷ் (Ma-Mati-Manush) அரசாங்கத்தின் சுற்றுலா துறைக்கான மிகப்பெரிய தூதர் நரேந்திர மோடிதான்.

அவர் நடந்து சென்ற சாலை மம்தா பானர்ஜி அரசாங்கத்தால் போடப்பட்டது. மோடியின் டபுள் என்ஜின் ஆட்சி நடைபெறும் பீகாரில் இருந்து வந்தவர்தான் ஜால்முரி விற்பனை செய்தது. அவர் பொருளாதாரக் கட்டாயத்தினால் வங்காளத்திற்கு வந்துள்ளார். பாஜக தலைவர்கள் தங்களாகவே தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் இங்கே மேற்கு வங்கத்தை மாற்ற வந்துள்ளனர் என்று சொல்கிறார்கள். அவர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.