தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் பலவீனமாகவே இருந்து வருகின்றன.
அமைச்சரவையில் இடம் பிடித்தது கூட்டணி பலத்தில்தான் இரு கட்சிகளும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்று வருகின்றன.
இரு கட்சிகளுமே தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகளுடன் மாறி மாறி அமைத்த கூட்டணியின் பலத்தில்தான் சில எம்.பி.க்களை பெற முடிந்தது.
காங்கிரசை பொறுத்த வரை ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சி என்று கூறினாலும் 59 ஆண்டுகளாக தமிழகத்தில் அந்த கட்சியால் மீண்டு வர முடியவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வரவும் முடியவில்லை.
இந்தநிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க.வுக்கு தனது ஆதரவை வழங்கி அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம் பிடித்துவிட்டது.
அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியில் கணிசமான தொகுதிகளை தமிழகத்தில் பெற வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.
அதே நேரம் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் த.வெ.க.வின் நிலைப்பாடு இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
ராகுல்காந்தி சென்னை வருகை கட்சி பலவீனமாக இருந்தாலும் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் அவ்வப்போது தமிழகத்திற்கு விஜயம் செய்து மக்களை சந்திக்க தவறுவதில்லை. அரசின் திட்டங்களையும் தொடங்கி வைக்காமல் இருப்பதில்லை.
இந்தநிலையில் ஒரு நாள் இடைவெளியில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் சென்னைக்கு வந்து முகாமிடுகிறார்கள்.
ராகுல்காந்தி வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை வருகிறார். அன்று மாலையில் தீவுத்திடலில் மாணவர்களுடன் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
பிரதமர் மோடி மறுநாள் (11-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) சென்னை வருகிறார். அன்று பூந்தமல்லி -வடபழனி இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை அவர் மெட்ரோ ரெயிலில் பயணிக்க உள்ளார். மேலும் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஜலகண்டே சுவரர் ஆலயத்திற்கும் செல்கிறார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
அடுத்தடுத்து ஒரு நாள் இடைவெளியில் இருகட்சிகளின் தலைவர்களும் சென்னையில் முகாமிடுவதால் அந்த இரு கட்சிகளும் தங்கள் பலத்தை காட்ட இப்போதே வரிந்து கட்டுகின்றன.
காங்கிரஸ் தரப்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாணவர்கள் மத்தியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். கியூஆர் கோர்டு மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்பதிவும் செய்யப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சி தீவுத்திடலில் நடைபெற்றாலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராகுல்காந்தி செல்லும் வழிநெடுக பெருமளவு காங்கிரஸ் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்டி தங்கள் பலத்தை காட்டுவதற்கு காங்கிரசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலாசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் பா.ஜ.க-விலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர் செல்லும் வழி நெடுக பெருமளவு பொதுமக்களை திரட்டி தங்கள் பலத்தை காட்ட தயாராகி வருகிறார்கள்.
அதற்காக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நேற்று இரவு நீண்ட நேரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பொதுமக்களை திரட்டுவது, வரவேற்பு ஏற்பாடுகள் செய்வது போன்றது பற்றி விரிவாக ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.
பிரதமர் மோடியும், ராகுல்காந்தியும் சென்னையில் சுமார் 4 மணி நேரம் தங்கியிருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.