தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டங்களின் போது, பிரதமர் மோடியின் உருவத்தை ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி தெலுங்கானா மாநில பாஜக நிர்வாகி சாய்கிரண் புகாரின் அடிப்படையில் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர். அதில் மெட்டா மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய்கிரண் அளித்த புகாரில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ஏஐ மூலம் இழிவாக சித்தரிக்கும் வகையில் இருந்த 20 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளின் (ரீல்ஸ்களின்) இணைப்பை பகிர்ந்துள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், அந்த சமூக வலைதள கணக்குகளை வைத்திருந்தவர்கள் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.
குறிப்பாக இத்தகைய உள்ளடக்கங்களை அனுமதிக்க உதவியதாக கூறி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உடைய தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி அருண் ஸ்ரீனிவாஸ் இணை குற்றவாளியாக அந்த எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புகாரில் குறிப்பிடப்பட்ட பதிவுகள் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த போலி வீடியோக்கள் மற்றும் படங்களைப் பதிவேற்றிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேர்வு முறைகேடு தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேஸ்புக்கிலிருந்து தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.
இந்த விவகாரங்களைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.