மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூருவில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்கத்தில் நேரடியாகப் பங்கேற்றார். அத்துடன், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) அன்று புதுடெல்லியில் இருந்து அவர் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முக்கிய உரையாற்றியுள்ளார்.
பெங்களூருவில் ‘தூய்மை பாரத’ இயக்கம்..
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மைசூர் பேங்க் சர்க்கிள் ஆஞ்சநேய சுவாமி கோவில் அருகே இன்று சிறப்புத் தூய்மைப் பணி நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் இணைந்து இந்தத் தூய்மைப் பணியில் நேரடியாகக் களமிறங்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பா.ஜ.க தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, "பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 12 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பை நிறைவு செய்துள்ளதை ஒட்டி, கர்நாடகா முழுவதும் பா.ஜ.க சார்பில் அர்த்தமுள்ள வகையில் இந்தத் தூய்மை பாரத இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று எங்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
தொடர்ந்து, இன்று மதியம் நடைபெறும் கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார்" என்று தெரிவித்தார்.
உலகளாவிய பொருளாதார மாநாடு..
இதற்கு முன்னதாக, புதுடெல்லியில் இருந்து காணொளி வாயிலாக நடைபெற்ற ‘வளர்ச்சிக்கான உலகளாவிய ஒருங்கிணைப்பு மாநாட்டில்’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.
மேம்பட்ட மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்து, திறமையான உலகளாவிய கட்டமைப்பின் கீழ் சீரான பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க இந்த மாநாடு நடைபெற்றது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்ட மாநாட்டில், உலக அளவிலான ஜி-7 நாடுகளின் தலைவர்கள், இந்தியா, பிரேசில், சீனா, கென்யா, தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிதியமைச்சர் பேசிய முக்கியக் கருத்துக்கள்..
இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் தனது கருத்துக்களைப் பதிவு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் நன்மைகளும் சவால்களும் உலக நாடுகள் அனைவருக்கும் பொதுவானவை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக உலகில் நடக்கும் போர்கள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளின் நேரடிப் பாதிப்புகள், வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் ‘குளோபல் சவுத்’ என்று அழைக்கப்படும் ஏழை நாடுகள் மீதே மிகக் கடுமையாகப் பாய்கின்றன.
இந்தச் சூழ்நிலையானது உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதை அவசியமாக்குகிறது. பன்னாட்டு அளவிலான கூட்டு ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும்.
அதன் மூலம் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை உருவாக்கவும், நிலையான வளர்ச்சியை துரிதப்படுத்தவும், அனைவருக்கும் பயனளிக்கும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யவும் முடியும் என்று சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்.