குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க வைக்கும் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உயிரிழந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குர்ஜார் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பப் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 6 ஆம் தேதி அன்று, அசோக் குர்ஜார் ராஜஸ்தானின் சவாய் மாதோபூரிலிருந்து சூரத் நோக்கி ஜெய்ப்பூர் - பாந்த்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.
ரெயில் பாணோலி ரெயில் நிலையத்தைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, அசோக் ரெயிலின் வாசலுக்கு அருகே அமர்ந்திருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் தூங்குவது போல் நடித்த நபர் ஒருவன், ரெயில் நெருங்கியதும் திடீரென எழுந்து ஓடிவந்து அசோக்கின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைதடுமாறிய அசோக், ரெயிலைப் பிடித்துத் தொங்க முயன்றார். ஆனால் வேகம் காரணமாக சில நொடிகளில் பிடிநழுவி பிளாட்பாரத்தில் பலமாக விழுந்து படுகாயமடைந்தார்.
விபத்துக்குப் பிறகு உடனடியாக மீட்கப்பட்ட அசோக், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரெயில்வே காவல்துறை, ரெயில் நிலைய சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் துணிச்சலாகச் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு, ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமான அந்த மர்ம நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் அரங்கேறியுள்ள இச்சம்பவம், ரெயில் பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.