இந்தியா

ஓடுபாதையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை..

இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பாராட்டியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

இந்திய ராணுவத்தின் ‘Team Mountain Eagles' பிரிவைச் சேர்ந்த 4 இலகுரக விமானங்கள், குஜராத்தில் உள்ள அமிர்தசரஸ்–ஜாம்நகர் பொருளாதார வழித்தட தேசிய நெடுஞ்சாலையில் (NH-754A) வெற்றிகரமாகத் தரையிறங்கி, எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் பாதுகாப்பாகப் புறப்பட்டுச் சென்றன.

இந்திய ராணுவம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடையேயான ஒருங்கிணைப்புக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சோதனை ஓட்டத்தின் முக்கிய அம்சங்கள்

மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி இந்திய ராணுவம் நடத்தி வரும் ‘வீரம் மற்றும் ஒற்றுமையின் சிறகுகள்’ சாகசப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

குஜராத்தின் கண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த 4 விமானங்களும், பதான் மாவட்டத்தில் உள்ள பகுத்ரா சுங்கச்சாவடிக்கு அருகே, NH-754A நெடுஞ்சாலையின் கி.மீ 946 முதல் கி.மீ 949 வரையிலான 3 கிலோமீட்டர் பகுதியில் துல்லியமாகத் தரையிறங்கின.

இந்தக் குழுவில் 2 நிலையான இறக்கை கொண்ட மைக்ரோலைட் விமானங்களும், 2 பவர்டு ஹேங் கிளைடர்களும் இடம்பெற்றிருந்தன.

நெடுஞ்சாலையிலேயே நடமாடும் வாகனங்கள் மூலம் மிக விரைவாக எரிபொருள் நிரப்பப்பட்ட பிறகு, 4 விமானங்களும் மீண்டும் வானில் சீறிப்பாய்ந்து பாதுகாப்பாகப் புறப்பட்டன.

இந்தச் சோதனையின்போது NHAI அதிகாரிகள், மாநில காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் இணைந்து போக்குவரத்தைத் திறம்பட ஒழுங்குபடுத்திப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டு

இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுப் பாராட்டியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, "இந்திய ராணுவம் மற்றும் NHAI இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருங்கிணைப்பு இது. நாட்டின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டுமின்றி, அவசரகாலத் தேவைகள் மற்றும் ஆயுதப் படைகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கும் ஏற்ற உலகத் தரத்திலான நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேசிய நெடுஞ்சாலைகளை சாகச விமானப் பயிற்சிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் PIB செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT