இந்தியா

மேகதாது விவகாரம்: தீவிரம் காட்டும் கர்நாடகா... உடனடியாக அணைக்கட்ட அனுமதிக்கோரி மத்திய அரசிடம் மனு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சிவகுமார்.

மேகதாது அணைக்கட்ட அனுமதிக்கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை சந்தித்து மனு அளித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார். மனு அளித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“மத்திய நீர்வள அமைச்சரைச் சந்தித்தோம். மேகேதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என்றும், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம்.

மகதாயி நதிநீர் விவகாரம் குறித்தும் நாங்கள் பேசினோம். எங்களுக்குக் கிடைக்க வேண்டிய ரூ. 5,300 கோடி நிதி அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது; அது இன்னும் விடுவிக்கப்படவில்லை.

பிரதமர் 25-ஆம் தேதி கர்நாடகா வருகை தரும்போது இது குறித்து முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்; அவர்களை நாங்கள் வரவேற்போம். எங்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடியிடம் அளித்த கடிதம் தொடர்பாக பேசிய அவர்,

“அந்தக் கடிதம் கர்நாடகாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி சார்ந்த விஷயங்களுடன் தொடர்புடையது. விவசாயம், நீர்ப்பாசனம், நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து எனப் பல்வேறு விவகாரங்கள் அதில் எழுப்பப்பட்டுள்ளன. அவர்கள் அதை ஆய்வு செய்து பரிசீலிப்பார்கள் என்று நினைக்கிறேன்." என தெரிவித்தார்.

மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாட்டின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டிவருகிறது கர்நாடகா. அந்த அணையால் கர்நாடக விவசாயிகளுக்கும் பலனில்லை என்று கூறப்பட்டாலும் தமிழ்நாட்டில் புது அரசு அமைந்துள்ளதை பயன்படுத்தி தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது கர்நாடகா.