இந்தியா

நீட் தகுதி பெற்றும் இந்த நிலை.. கட்டண சுமையால் கைநழுவும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு

தலா 100 இடங்களை கொண்ட 20 புதிய மருத்துவக் கல்லூரிகளின் மொத்த கொள்ளளவுக்கு சமமான இடங்கள் வீணாகியுள்ளன.

இந்தியாவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பை நோக்கமாக கொண்டு இரவும் பகலுமாக படித்து வருகிறார்கள்.

நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தங்களுக்கு ஒரு மருத்துவ இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இவர்கள் தவிக்கும் நிலையில், நாடு முழுவதும் சுமார் 2,000 மருத்துவ இடங்கள் யாருமின்றி காலியாகக் கிடக்கின்றன என்ற கசப்பான உண்மை வெளிவந்துள்ளது.

கடன் தவணை

அதாவது, தலா 100 இடங்களை கொண்ட 20 புதிய மருத்துவக் கல்லூரிகளின் மொத்த கொள்ளளவுக்கு சமமான இடங்கள் வீணாகியுள்ளன.

லட்சக்கணக்கான தகுதிபெற்ற மாணவர்கள் வெளியே காத்திருக்க, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிலவும் அசுரத்தனமான கட்டண அமைப்பே இந்த அவல நிலைக்கு முதன்மைக் காரணமாக உருவெடுத்துள்ளது.

தனியார் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஆண்டுக் கல்விக் கட்டணம் பல லட்சங்களை தொடுகிறது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களிலேயே ஆண்டுக்கு கணிசமான தொகை தேவைப்படும் நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் கோடிகளில் செலவிட வேண்டிய சூழல் நிலவுகிறது.

படிப்பை முடித்து வெளியேறும் ஓர் இளம் மருத்துவருக்குத் தொடக்கத்தில் கிடைக்கும் மாத ஊதியத்தைக் காட்டிலும், படிப்பிற்காக வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய மாதத் தவணைத் தொகை பல மடங்கு அதிகமாக உள்ளது.

இதனால், பெற்றோர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முழுமையாக இழந்து கடன் வலையில் சிக்க அஞ்சுகிறார்கள். இதன் விளைவாக, அதிக மதிப்பெண் பெற்றும் ஏழை மாணவர்கள் மருத்துவ கனவை கைவிடும் பரிதாபம் தொடர்கிறது.

கட்-ஆப் கோரிக்கை

காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தகுதி வரம்பை குறைக்க வேண்டும் என்றும், கூடுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் தனியார் நிர்வாகங்களும் சில மாநிலத் தேர்வுக் குழுக்களும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இருப்பினும், தகுதி மதிப்பெண்களை குறைப்பது மருத்துவக் கல்வியின் தரத்தைச் சீர்குலைத்துவிடும் என்பதால், கட்-ஆப் மதிப்பெண்களை குறைக்கக் கூடாது என்றும், தனியார் கல்லூரிகளின் கட்டணத்திற்கு மத்திய அரசு உடனடியாக கட்டுப்பாட்டு உச்சவரம்பு விதிக்க வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்துகிறார்கள்.

முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி

இதேபோன்று மகாராஷ்டிர மாநிலத்திலும் பல ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் எஞ்சியுள்ளன. ஆனால், அங்குள்ள பின்னணி சற்று மாறுபட்டது. இதுவரை தனியார் கல்லூரிகளே தன்னிச்சையாக நடத்தி வந்த நிறுவன அளவிலான மாணவர் சேர்க்கை முறையை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

அனைத்து சேர்க்கைகளும் மாநில பொது நுழைவுத் தேர்வு பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டதால், பின்வாசல் வழி நுழைவு மற்றும் முறைகேடான சேர்க்கைகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன. வெளிப்படையான சேர்க்கை முறை நடைமுறைக்கு வந்ததும், கட்டணச்சுமை காரணமாக மாணவர்கள் ஒதுங்கியதும் இந்த இடங்கள் காலியாக எஞ்சியதற்கு காரணமாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT