ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையிலான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்தது. ஹார்முஸ் நீரிணையை 6-ம் தேதி இரவுக்குள் திறக்காவிட்டால், ஈரானில் மின்சார நிலையங்கள், பாலங்கள் போன்ற சிவில் உள்கட்டமைப்புகளை தகர்ப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள மின் நிலையங்கள் முன்பாக ஈரான் மனித சங்கிலியாக அணி திரண்டனர். இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருந்த நிலையில் இடைக்கால போர் நிறுத்த முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டது.
அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்கா மற்றும் ஈரான் தலைவர்களுடன் தொலைபேசி வழியாக அவர் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தத் தற்காலிக போர் நிறுத்தத்தை பல்வேறு நாடுகளும் வரவேற்றுள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்கிறது. நாங்கள் முன்னரே தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைப் போலவே, இது மேற்கு ஆசியாவில் ஒரு நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.
தற்போதைய மோதலுக்கு விரைவில் ஒரு முடிவை கொண்டுவர, பதற்றத் தணிப்பு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவை அவசியமானவை.
இந்த மோதல் ஏற்கனவே மக்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வலைப்பின்னல்களையும் சீர்குலைத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரமும், உலகளாவிய வர்த்தகப் பரிமாற்றமும் நிலவும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உக்ரைனில் அமைதி முயற்சிகளை ஊக்குவிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.