இந்தியா

Gujarat: மேட்ரிமோனி மூலம் 21 பெண்களை ஏமாற்றிய போலி போலீஸ் அதிகாரி கைது

ஏஐ மூலம் போலியான அரசு ஆவணங்களை உருவாக்கியுள்ளார்.

திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனி தளங்கள் மூலம் காவல்துறை அதிகாரிபோல நடித்து குஜராத்தை சேர்ந்த நபர் 21 பெண்களை ஏமாற்றியுள்ளார்.

பெண்களிடம் தன்னை சைபர் குற்றப் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஏமாற்று வேலையில் ஈடுபட்ட ராக்கி யோகேஷ் பாய் பஞ்சல் என்ற அந்த நபரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அகமதாபாத்தைச் சேர்ந்த ராக்கி, உதய்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். முன்பு மொபைல் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் வணிகத் தளங்களில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

ஏமாற்று வேலை:

பல்வேறு திருமண இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் தன்னை ஒரு காவல் உதவி ஆய்வாளர், சைபர் குற்ற அதிகாரி அல்லது பிற அரசு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்.

பெண்களிடம் நம்பிக்கை ஏற்படுத்திய பிறகு, அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதற்காக வருமான வரிச் சோதனை, அவசரத் தேவை அல்லது நிதிச் சிக்கல்கள் போன்ற பொய்யான சூழ்நிலைகளை அவர் உருவாக்குவார்.

இதை நம்ப வைக்க ஏஐ மூலம் போலியான அரசு ஆவணங்களை உருவாக்கியுள்ளார்.

இப்படி ​​பல்வேறு பெண்களிடம் இருந்து ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை பணம் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

சுமார் 20 முதல் 21 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மேலதிக விசாரணை நடந்து வருகிறது.