இந்தியா

மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை

முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது இயற்கையான உயிரியல் நிகழ்வு.

மகப்பேறு விடுப்பு தொடர்பாக, ஐகோர்ட்டுக்கு சென்று தனக்கான உரிமையை பேராசிரியை ஒருவர் நிலை நாட்டியுள்ளார்.

இரட்டை குழந்தைகள்

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி (வயது 35), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது முறையாக ஸ்வரூப ராணி கடந்த ஏப்ரல் மாதத்தில் கர்ப்பமானார்.

இதையடுத்து தனக்கு மகப்பேறு விடுப்பு வேண்டி அவர் கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால், அரசு விதிகளின் படி “இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மகப்பேறு விடுப்பு கிடையாது" என்ற விதியைக் காட்டி அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை அதிரடியாக நிராகரித்தனர்.

தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு

அதிகாரிகளின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்வரூப ராணி தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், "முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது இயற்கையான உயிரியல் நிகழ்வு. அதை இரண்டு தனித்தனி பிரசவங்களாகக் கருதக் கூடாது. எனவே எனக்கு விடுப்பு மறுப்பது சட்டவிரோதம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கே.சரத் விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணையில் பரபரப்பு தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், மகப்பேறு விடுப்பு என்பது பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட நலத்திட்டமாகும். விதிகளை எந்திரத்தனமாகப் பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுக வேண்டும். முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால், அதை ஒரே ஒரு பிரசவமாகத்தான் கருத வேண்டும். இரண்டு குழந்தைகளாக கணக்கிட்டு மகப்பேறு விடுப்பை மறுக்கக் கூடாது.

அதிரடி தீர்ப்பு

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் அடுத்த பிரசவத்திற்கு விடுப்பு வழங்கலாம் என தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதனை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, மனுதாரருக்கு ஏப்ரல் 14, 2026 முதல் அக்டோபர் 11, 2026 வரையிலான 180 நாட்களுக்கு முழு சம்பளம் மற்றும் இதர படிகளுடன் கூடிய மகப்பேறு விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தெலுங்கானா ஐகோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.