திருமண வாழ்வில் பொருந்தாமை, இல்லறத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை, கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவில் காவல்துறையில் பணிபுரியும் தம்பதிகளுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது.
திருமணமாகி நான்கு மாதங்களான நிலையில், அவர்களுக்குள் தாம்பத்தியம் நடைபெறவில்லை என்று கூறி திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் திருமணமான அந்த பெண் அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 498A, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பெண்ணின் கணவர் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட கணவர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவர், இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ், முழுமையடையாத திருமண உறவை ஒருபோதும் கொடுமைக்கான குற்றமாக பார்க்க முடியாது என்று வாதிட்டார்.
மறுபுறம் கணவர் குறித்து அவரின் மனைவி கூறுகையில், “நாம் நண்பர்களாக மட்டும் இருப்போம் என்று என் கணவர் தொடர்ந்து கூறி வந்தார். மேலும் அவர் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார்” என்று கூறினார்.
இந்த மனு நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொது நீதிபதி, “குறுகிய கால திருமண வாழ்வில் கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கின் முழு கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
திருமண பொருத்தமின்மை, திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தார்.