மன்மோகன் சிங், எஸ்.ஒய். குரேஷி  
இந்தியா

"நான் தற்கொலை செய்து கொள்வேன்" என கூறிய மன்மோகன் சிங் - முன்னாள் தேர்தல் ஆணையர் புத்தகத்தில் பகிர்ந்த சம்பவம்

காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையை விமரிசிக்கத் தொடங்கினர்.

2010 முதல் 2012 வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஒய். குரேஷி.

இவர் தற்போது 'India and I: A Hundred Memories, Not a Memoir' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் 2012 இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குறித்த நெகிழ்ச்சியான சம்பவத்தை குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

ஆணையம்

கடந்த 2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு 4.5 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்படும் என்று வாக்களித்தார்.

இதற்கு எதிராக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், சல்மான் குர்ஷித்துக்கு கண்டனம் தெரிவித்தது.

இதனால் காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் தேர்தல் ஆணையத்த்தை விமரிசிக்கத் தொடங்கினர்.

கவலை

விமர்சனங்கள் குறித்து எனக்கு பயமில்லை என்றும் ஆனால், இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்கள் தேர்தல் ஆணையம் என்ற ஒரு தன்னாட்சி அமைப்பின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும் என்று தனது கவலையை அப்போதைய பிரதமரின் ஊடகச் செயலாளர் ஹரீஷ் கரேவிடம் குரேஷி பகிர்ந்துகொண்டார்.

இந்தத் தகவல் பிரதமரின் கவனத்திற்கு சென்ற அடுத்த நாளே, பிரதமர் அலுவலகத்தில் இருந்து குரேஷிக்கு அவசர அழைப்பு வந்தது. அன்று மாலை மன்மோகன் சிங்கை குரேஷி நேரில் சந்தித்தார்.

சந்திப்பு

அந்த சந்திப்பில் குரேஷியிடம் பேசிய மன்மோகன் சிங், உணர்ச்சிவசப்பட்டு, "அமைச்சர்களின் பேச்சுக்களுக்கு பின்னால் எனது தூண்டுதல் இருப்பதாக நீங்கள் உண்மையிலேயே கருதினால், நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குரேஷி, தனது அதிருப்தி உங்கள் மீது இல்லை என்றும், சில அமைச்சர்களின் தரம் தாழ்ந்த அறிக்கைகள் மீது மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

வருத்தம்

தொடர்ந்து பேசிய மன்மோகன் சிங், இந்த விவகாரம் தனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை கடுமையாகக் கண்டித்திருப்பேன் என்று கூறினார்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், நீங்கள் எனக்கு நேரடியாகத் தொலைபேசியில் அழைக்கலாம் என்றும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் பேசுவது முற்றிலும் நின்றது என்றும் குரேஷி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டு

மன்மோகன் சிங் அதிகாரத்தை எப்போதும் மிகுந்த சுய கட்டுப்பாட்டுடனும், பொறுப்புடனும் கையாண்ட ஒரு தலைவர் என்று குரேஷி பாராட்டியுள்ளார்.

பொது வாழ்வில் பல செல்வாக்கு மிக்க மனிதர்களைத் தான் பார்த்துள்ளதாகவும், மன்மோகன் சிங்கிடம் இருந்த பண்புகளை சிலரிடமே கண்டிருப்பதாகவும் குரேஷி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.