இந்தியா

மணிப்பூர் கலவரம்: 3 ஆண்டுகள் நிறைவு - இன்னும் அறிக்கை வழங்காமல் மெத்தனம் - நீதிக்காக காத்திருக்கும் மக்கள்

இதுவரை நான்கு முறை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மே 3: மணிப்பூர் கலவரம் தொடங்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த இனக்கலவரத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

சட்டப்படி ஒருவர் காணாமல் போனால், 7 ஆண்டுகள் கழித்தே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்க முடியும். அதுவரை இறப்புச் சான்றிதழ் கிடைக்காது.

இறப்புச் சான்றிதழ் இல்லாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்த இழப்பீடு, அரசு வேலை மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.

காணாமல் போனவர்கள் குறித்துப் பலமுறை காவல்துறையிலும், மணிப்பூர் உயர்நீதிமன்றத்திலும் முறையிட்டும் இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மணிப்பூர் வன்முறைக்கான காரணங்கள் மற்றும் தோல்விகளை ஆராய மத்திய அரசு நியமித்த மூன்று பேர் கொண்ட விசாரணைக் கமிஷன், மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

2023 ஜூன் மாதம் அமைக்கப்பட்ட இந்த கமிஷன், ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், இதுவரை நான்கு முறை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, காணாமல் போனவர்களைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்கவும் வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.