ஜோதிராதித்யா சிந்தியா
இந்தியா

சாலை போடவில்லை என்றால் வாக்கு போடமாட்டோம்: எச்சரித்த நபருக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்..!

எச்சரிக்கை விடுப்பதுபோல் மக்கள் கூறியதால், இதுபோன்ற பேசக்கூடாது என அமைச்சர் தெரிவித்தார்.

இதுபோன்ற வார்த்தைகளை ஒருபோதும் என்னிடம் பயன்படுத்தாதீர்கள். புரிந்ததா?. நான் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வந்து கோரிக்கைகளை வையுங்கள் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா. இவர் மத்திய பிரதேசம் குனா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாதுகாப்பு வாகனங்களுடன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் திடீரென அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை இடைமறித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் கிராமத்தில் சாலைகள் சரியான வகையில் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது. அதை சரி செய்து தர வேண்டும் என்று குரல் எழுப்பினர். அத்துடன் சாலை இல்லை எனில், வாக்கு இல்லை என குரல் எழுப்பினார்.

இதனால் ஜோதிராதித்யா சிந்தியா, மக்கள் தங்களுடைய வேண்டுகோளை வைப்பதற்குப் பதிலாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசுவதா? அந்த பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதை தான் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

"இதுபோன்ற வார்த்தைகளை ஒருபோதும் என்னிடம் பயன்படுத்தாதீர்கள். புரிந்ததா?. நான் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வந்து கோரிக்கைகளை வையுங்கள். வேலைகளை முடித்து தருவது என்னுடைய பொறுப்பு" என்று அமைச்சர் பதில் அளித்தார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிந்தியா "சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குனா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னலால் ஷக்யாவின் ஒதுக்கீட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார்.

மேலும், மழைக்காலம் முடிந்த பிறகு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு சிந்தியா உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT