இந்தியா

Indigo | நடுவானில் விமானத்தின் எமர்ஜன்சி எக்சிட் கதவை திறந்த பயணி - சொன்ன காரணம் தான் ஹைலைட்!

மீண்டும் அத்தகைய செயலை செய்ய வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தனர்.

சனிக்கிழமை இரவு பெங்களூருவில் இருந்து வராணாசி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E-185-ல் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. விமானம் தரையிறங்கும் நேரத்தில் எமர்ஜன்சி எக்சிட் கதவைத் திறக்க முயன்ற ஒரு பயணி, தனக்கு பேய் பிடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இரவு 8:15 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் உத்தரப் பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அட்னான் என்பவர் பயணித்தார். புறப்பட்டு வெறும் 15 நிமிடங்களுக்குள் அட்னான் எமர்ஜன்சி எக்சிட் கதவை திறக்க முயற்சித்தார். விமான பணியாளர்கள் உடனடியாக கண்டுபிடித்து, அது தவறுதலாக நடந்தது என்ற அவரது வாதத்தை ஏற்று, மீண்டும் அத்தகைய செயலை செய்ய வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தனர்.

இதற்கு பிறகு அட்னான் இயல்பாகவே நடந்துகொண்டார். ஆனால், இரவு 10:20 மணியளவில் விமானம் வராணாசி லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தரைக்கு 500 அடி உயரத்தில் இருந்தபோது, அவர் மீண்டும் அதே எமர்ஜன்சி எக்சிட் கதவை திறக்க முயன்றார். விமான பணியாளர்களின் உடனடி எச்சரிக்கையை பெற்ற உடனேயே, விமானி துரிதமாகச் செயல்பட்டு தரையிறக்க முயற்சியை ரத்து செய்தார்.

பிறகு ‘கோ-அரவுண்ட்’ நடவடிக்கையை மேற்கொண்டு, விமானத்தை பாதுகாப்பாக இரவு 10:35 மணிக்கு தரையிறக்கினார். இந்த சம்பவம் பயணிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்தது. பலரும் “விமான பணியாளர்களின் விரைவான மற்றும் தொழில்முறை செயல்பாட்டுக்கு நன்றி” என்று தெரிவித்தனர்.

வழக்கமான நடைமுறைப்படி அட்னான் உடனடியாக விமான நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவினரிடமும், சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விமான நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டபோது அட்னான் முதலில் “தனது செயலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை” என்றார். பின்னர், “பேய் பிடித்திருந்தது” என்று அதிர்ச்சியூட்டும் விளக்கம் அளித்தார்.

போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டபோது, அவர் கோவாவில் விடுமுறை சென்று திரும்பியதாகவும், தான் இழுத்த ஹேண்டில் அவசர வெளியேறும் கதவின் ஹேண்டில் என்று தெரியாது என்றும் கூறினார். “எங்கள் விசாரணை முழுமையாக நடைபெற்று வருகிறது. குற்றவாளி இன்னும் விசாரணையில் உள்ளார். அவரது குடும்பத்தினர் மாவ் நகரில் இருந்து வராணாசிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.