மிக பாதுகாப்பான இடமாக கருதப்படும் டெல்லி விமான நிலையத்திற்குள், நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற முயற்சியை மத்திய தொழில் பாதுகாப்பு படை முறியடித்தது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம்-3-க்குள் நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக நுழைய முயலும் காட்சியை, சி.ஐ.எஸ்.எஃப். தனது எக்ஸ் தளத்தில் 25 வினாடிகள் கொண்ட காணொளியாக பகிர்ந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட நபர் ஹரியானாவை சேர்ந்தவர் என்றும், அவர் விசாரணைக்காக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறினர்.
"இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம்-3 புறப்பாட்டு வாயிலில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள், மிகுந்த விழிப்புணர்வுடனும் துரிதமாகவும் செயல்பட்டு, முறையான பயண ஆவணங்கள் இன்றி உள்ளே நுழைய முயன்ற நபரை பிடித்துள்ளனர்" என்று சி.ஐ.எஸ்.எஃப். தெரிவித்தது.
அந்த காணொளியில், பாதுகாப்பு பணியாளர்கள் அந்த நபரை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்த முயற்சிப்பதும், அவர் அதையும் மீறி உள்ளே நுழைய முற்படுவதும் பதிவாகியுள்ளது. முனையத்திற்குள் சில மீட்டர் தூரம் ஓடிய அந்த நபரை, ஆயுதம் ஏந்திய சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் மற்ற வீரர்களுடன் இணைந்து மடக்கிப் பிடித்தார்.
"விரைவு எதிர்வினைப் படையினரின் (QRT) சரியான நேர உதவியுடன், அந்த நபர் சில நொடிகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத நுழைவு தடுக்கப்பட்டு, ஏற்படவிருந்த பாதுகாப்பு மீறல் தவிர்க்கப்பட்டது" என்று சி.ஐ.எஸ்.எஃப். தெரிவித்துள்ளது.
அந்த நபரின் பையில் இருந்த சில அடையாள அட்டைகள் மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
விமான நிலைய முனையத்திற்குள் நுழையும் பயணிகள், தங்களின் பயண ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களிடம் சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். விமான நிலைய ஊழியர்களும் உள்ளே நுழையத் தங்களின் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்திற்கு, சிஐஎஸ்எஃப் படையினர் ஆயுதமேந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.