இந்தியா

திரையரங்கிற்கு கண்ணாடி அணிந்து படம்பார்க்க வந்த நபர்: அனுமதி மறுத்த பாதுகாவலர்கள் - வைரலான வீடியோ

பிரபல திரையரங்கான பி.வி.ஆர்.க்கு படம் பார்ப்பதற்காக அக்டோபர் 30 அன்று நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.

ஐடி ஊழியர் ஒருவர் ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்துகொண்டு படம் பார்ப்பதற்காக பி.வி.ஆர் திரையரங்கிற்கு சென்ற போது, திரையரங்கின் நுழைவாயிலில் இருந்த காவலர்கள் ஸ்மார்ட் கண்ணாடியுடன் படம் பார்ப்பதற்கு அனுமதி மறுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகியுள்ளது.

திரையரங்குகளில் திரையிடப்படும் படங்கள் அது வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் கசிந்து தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சினிமா கலைஞர்களின் வாழ்வாதரத்தை பாதித்து வருகிறது.

இதை தடுக்கும் வகையில் திரையரங்கிற்கு படம் பார்ப்பதற்காக வரும் மக்களிடம் எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் உள்ளனவா என பரிசோதனை செய்து, பின்னர் அவர்களை உள்ளே திரையரங்கு பாதுகாவலர்கள் அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல திரையரங்கான பி.வி.ஆர்.க்கு படம் பார்ப்பதற்காக அக்டோபர் 30 அன்று நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.

அந்த நபருக்கு கண் பார்வையில் சில குறைபாடுகள் உள்ளதால் மெட்டா நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி வந்துள்ளார்.

அப்போது திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த அவரை பரிசோதனை செய்த ஊழியர்கள், ஸ்மார்ட் எலக்ட்ரானிக் பொருட்கள் திரையரங்கிற்கு உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த வகை கண்ணாடிகளில், படங்களை பதிவு செய்யும் கேமராக்கள் உள்ளதால் அவற்றை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும், ஒருவரை அனுமதித்தால் இது வாடிக்கையாகி விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த நபர், தான் இந்த ஸ்மார்ட் கண்ணாடியை பல ஆண்டுகளாக உபயோகிப்படுத்தி வருவதாகவும், இந்த கண்ணாடி மூலம் தான் எனது தொலைதூர பார்வையை சரிபடுத்தி தெளிவாக பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நான் திரைப்படத்தை பதிவு செய்ய நினைத்தால், அதனை எனது கைபேசியின் மூலம் எளிதாக பயன்படுத்தியிருப்பேன், ஆனால் நீங்கள் எனது கண்ணாடிக்கு மட்டும் தான் அனுமதி மறுக்கிறீர்கள் எனறும் கூறினார்.

ஆனால் திரையரங்கு பாதுகாவலர்கள் விதிகளின் படி டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே திரையரங்கிற்குள் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு அனுமதி இல்லை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை பதிவு செய்த அந்த நபர், அதனை இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அது பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து பயனர்கள் வெளியிட்டுள்ள பதிவில், திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த நபர், தான் ஒரு கொள்கைக்கு எதிராக வாதிட்டு கொண்டே அதனை வீடியோவாக பதிவு செய்வதாகவும், இது மிகவும் வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும் ஏன் எல்லாவற்றையும் ஏன் தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்கிறீர்கள், திரையரங்கிற்கு சில விதிகள் இருந்தால் அவற்றை மதிக்க வேண்டும் எனவும், சாதாரண கண்ணாடி அணிந்து திரைப்படத்தை பாருங்கள் எனவும் பதிவிட்டனர்.

இந்த விதமான விதிகளை பாதுகாவலர்கள் உருவாக்கவில்லையென்றும், பிறகு ஏன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என்றும் பதிவிட்டனர்.

ஒருவர் மொபைல் போனில் படத்தை பதிவு செய்தால் அதனை எளிதாக மற்றவர்களால் கவனிக்க முடியும், ஆனால் ஸ்மார்ட் கண்ணாடி மூலம் பதிவு செய்தால் அவற்றை கண்காணிக்க முடியாது என்றும் பதிவிட்டனர்.

SCROLL FOR NEXT