டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர் நிதேஷ் (20). இவர் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிதேசுக்கும் அங்கு வந்த கரண் (18) என்பவருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் கரணுடன் வந்த மாண்டி (22) மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவனும் சேர்ந்து நிதேசை கடுமையாக தாக்கினர்.
இந்தநிலையில் கரண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிதேசை பலமுறை குத்தினார். இதில் நிலைகுலைந்த நிதேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே 3 பேரும் அங்கிருந்து சென்றனர். பலத்த காயமடைந்த நிதேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நிதேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கரண் இன்ஸ்டாகிராமில் இந்த சம்பவம் குறித்து ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் "உங்கள் சகோதரன் ஒரு கொலை செய்து விட்டேன். சில நாட்களுக்குச் சிறைக்குச் செல்லப் போகிறேன். உங்கள் அன்பைத் தொடர்ந்து அனுப்புங்கள்" என்று இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்பவர்களிடம் வீடியோவில் பெருமையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் பொதுமக்கள் கூறிய தகவல்களை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
கொலை நடந்த 4 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் மூவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் போலீசிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சிறுவன் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கரண் மற்றும் மாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.