சாஹிப்கஞ்ச் சிறையில் இருந்து தன்பாத் சிறைக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தபோது, ஜம்தாரா மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நடைபெற்ற போலீஸ் மோதலில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சுஜித் சின்ஹா கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் அளித்த தகவலின்படி, கைதிகளை ஏற்றி சென்ற வாகனம் பயணத்தின்போது விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் சின்ஹா கொல்லப்பட்டார்.
மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டது. அதேவேளையில், அனைத்து சட்ட மற்றும் நடைமுறை விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் ஒரு மாஜிஸ்திரேட் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்த மோதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் முழு வரிசையையும் கண்டறிய விசாரணையும் தடயவியல் ஆய்வும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜம்தாரா மாவட்டகாவல் கண்காணிப்பாளர் (SP) ஷாம்பி குமார் சிங், "சுஜித் சின்ஹா சாஹிப்கஞ்ச் சிறையில் இருந்து தன்பாத் சிறைக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தார். பயணத்தின்போது வாகனம் விபத்துக்குள்ளானது.
அதைத் தொடர்ந்து போலீஸ் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது, மேலும் மாஜிஸ்திரேட்டும் சம்பவ இடத்தில் உள்ளார்," என்று கூறினார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) வழிகாட்டுதல்களின்படி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் தடயவியல் ஆய்வு மோதல் தொடர்பான துல்லியமான சூழலை தீர்மானிக்க உதவும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
"நாங்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்றி வருகிறோம். மாஜிஸ்திரேட் முன்னிலையில் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான ஆய்வு, மீதமுள்ள அம்சங்களை தெளிவுபடுத்த உதவும்," என்று காவல் கண்காணிப்பாளர் மேலும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.