இந்தியா

225 தொகுதிக்கும் அதிகமாக பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்: மம்தா உறுதி

தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்கிடையே, நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் தொங்கு சட்டசபை அமையும் என

சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும்.

பி-மார்க் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 150 முதல் 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும் கைப்பற்றும்.

பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திரிணமூல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்களையும், பாஜக அணி 95 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 226-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் மே 4-ம் தேதி சட்டசபைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்.

தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டவை. இவை அனைத்தும் புனையப்பட்டவை.

திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கத்துடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைவரும் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்கவேண்டும். 294 தொகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை வேட்பாளர்களும் மூத்த தலைவர்களும் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்

திரண்டு வந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவினர் ஏதாவது வன்முறையைக் கட்டவிழ்த்தால் உடனடியாகப் பதிலடி கொடுக்காதீர்கள். அமைதியையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள்.

நாங்கள் 226-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என தெரிவித்துள்ளார்.